பெருந்தொற்றில் நம்மை காத்த செவிலியர்களைக் கைவிட்ட தி.மு.க ஆட்சி
By Vaishnavi
நாங்க சொல்றத, நாங்களே கேட்க மாட்டோம்”- CM மு.க. ஸ்டாலின் சீரீஸ்
“அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். தற்போது பணியாற்றி வரும் ஒப்பந்த மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்றெல்லாம் ஆட்சிக்கு வரும் முன் வீர வசனம் பேசிய மு.க. ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு 2023 புத்தாண்டு பரிசாக 2472 MRB செவிலியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளார். ஏற்கனவே 818 செவிலியர்களைக் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பணி நீக்கம் செய்ததோடு மொத்தம் 3300 செவிலியர்களை விடியல் ஆட்சி பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்படச் செவிலியர்கள் 13 நாட்கள் நிகழ்த்திய பல முனை, பல வடிவ போராட்டங்கள் அரசின் செவிகளை எட்டாத நிலையில், சுகாதாரத்துறையின் தூணாக இருந்த இச்செவிலியர்களின் பாதை வெவ்வேறாகச் சிதறியுள்ளது . வேலையில்லாத சூழலில் சிலரும், எந்த வித வேலை உத்தரவாதமும் இல்லாத செவிலியர் பணிகளில் சிலரும், குடும்ப சூழல் காரணமாகக் கிடைக்கின்ற வேலைகளில் சிலரும் உள்ள நிலையில் உழைக்கும் பெண்களுக்கு இழைத்த பெரும் அநீதி செவிலியர்களின் பணி நீக்கம்.
“குடும்பத்தை எதிர்த்து , வேறு ஊர்களுக்கு வந்து, பிறந்த குழந்தையைக் கூட கவனிக்காமல் வேலை வேலை என ஓடிக்கொண்டிருந்த எங்களை ஒரே நாளில் வீசியடித்த போது சொல்வதற்கு வார்த்தை இல்ல” “எங்கள் உயிரையும் பொருட்படுத்தாது கொரோனா சமயத்தில் பணி புரிந்த எங்களுக்குப் புத்தாண்டு அன்று கிடைத்த பணி நீக்கச் செய்தி கொடுங்கோல் ஆட்சியிலும் நடக்காது” என்று மனம் உடைகின்றனர் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள். தகுந்த MRB தேர்வெழுதி, மூன்று ஆண்டுகள் பணி செய்த இச்செவிலியர்களை “யூஸ் அண்ட் த்ரோ” (பயன்படுத்தித் தூக்கிப்போடு ) என்பதைப் போலத் தூக்கியெறிந்த அரசாங்கம் 3330 குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் நம்பிக்கையையும் சிதைத்துள்ளது
“காலியிடங்கள் இருக்கும் இச்சூழலிலும் பணி உத்தரவாதம் செய்வதற்கான துளி எண்ணமும் ஆட்சியாளர்களுக்கு இல்லை ” என்று கூறுகிறார் செவிலியர் மற்றும் MRB அஸோஸியேஷன் பொதுச் செயலாளர் ராஜேஷ். பணி நீக்கத்திற்கான காரணத்தைப் பற்றி அவரிடம் பேசிய போது, “இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை எனக்கூறுகிறார்கள். வேலையில் அமர்த்த கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இப்பொய்களைத் திரிக்கின்றனர்”. என்று ராஜேஷ் குறிப்பிடுகிறார்.
ஆக இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று சொல்லும் காரணம் வெறும் கண் துடைப்பாகவே இருக்கிறது. “24-6-2020 செவிலியரான எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, 4-7-2020 அன்று மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது . 10 நாட்களுக்குப் பின்னர் அழைப்பு விடுக்கப்பட்ட மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு பின்பற்றி இருக்கும்போது எங்களுக்கு எப்படிப் பின்பற்றாமல் இருந்திருக்க முடியும் ? மருத்துவர்களையும் செவிலியர்களையும் பாரபட்சமாகப் பார்க்கின்றனர் ” என்று கூறுகிறார் ராஜேஷ்
செவிலியர்களை பணியமர்த்துவதற்கான அரசின் திட்டம் தான் என்ன ?
மாவட்ட சுகாதார சங்கம் ( District Health Society) – மாவட்ட ஆட்சியாளருக்குக் கீழ் இச்செவிலியர் பணி நியமனங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதில் MRB தேர்வு எழுதியவர்கள், எழுதாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். ” இத்திட்டத்திற்கு எதிராக தான் நாங்கள் DMS இல் போராடினோம். ஆட்சியாளருக்குக் கீழ் செவிலியர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்று அன்று உறுதிக்கொடுத்தனர். DHS இற்கு கீழ் 11 மாதம் பணிக்காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பின் இடைவேளை எடுத்துக்கொண்டு வேலையில் தொடரலாம். இதில் பணி நிரந்தரத்திற்கான எந்த வித உத்தரவாதமும் இல்லை. தற்போதைய நிதி தேவைக்காரணமாக இதில் இணைகின்றனர். ” என்று குறிப்பிடுகிறார் செவிலியர் புவனேஸ்வரி.
“மாவட்ட சுகாதார சங்கம் district health society யின் கீழ், open tender மூலம் பணியமர்த்திக்கொண்டு உள்ளனர். உள்ளூர் நிர்வாகம் அதை 1 லட்சம், 1.5 லட்சம் 2 லட்சத்திற்கும் விற்றுக்கொண்டு உள்ளனர்” எனக்குறிப்பிடுகிறார் ராஜேஷ்
கொரோனா காலத்தில் செவிலியர்களுக்கான தேவை இருந்தது. இப்போது ஏன்?
தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கு போதுமான செவிலியர்கள் இல்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர் இச்செவிலியர்கள். “10 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கவேண்டும். ஆனால் அதே பத்து பேருக்கு ஒரு செவிலியர் கூட இல்லை. 7.5 கோடி மக்களுக்கும் சேர்த்து 30,000 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்”. என்று சுட்டிக்காட்டுகிறார் ராஜேஷ்.
“மேலும் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணியமர்தப்படுகிற செவிலியர்கள் 13 மணி நேரம் வேலை செய்கின்றனர். பணியில் இருக்கும் செவிலியருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் அந்த வேலையைப் பார்ப்பதற்கு வேறு யாரும் கிடையாது. எத்தனையோ ஆரம்பச் சுகாதார நிலையம் மூடப்படுகிறது. எத்தனையோ ANM சிகிச்சை கொடுக்கும் சூழல் வருகிறது” என்று செவிலியர்களின் பற்றாக்குறை பற்றி விவரிக்கிறார் ராஜேஷ்.
தி மு க ஆட்சியின் வாக்குறுதிகள் வாய்ப்பேச்சுக்கு மட்டுமே, செயல்பாட்டிற்கானது இல்லை என்பதற்கான சாட்சி செவிலியர்களின் வேலை நீக்கம். காலியிடங்கள் இருக்கும்போதும், இருக்கின்ற செவிலியர்களுக்கு அதிக வேலைப் பளு நிலவும்பொழுதும் அரசு செய்கிற இந்த வேலை நீக்கம் தொழிலாளர்கள் விரோத போக்கைத் தாண்டி சுகாதாரத்துறை மீதுள்ள அக்கறையின்மையையும் தனியார்மயத்தை ஆதரிக்கும் நோக்கைக் காண்பிக்கிறது. மேலும் மக்களுக்காக உழைத்த இச்செவிலியர்களுக்கான ஆதரவை மக்கள் அமைப்புகள் கொடுப்பது அவசியமாகிறது
Subscribe to support Workers Unity – Click Here
(Workers can follow Unity’s Facebook, Twitter and YouTube. Click here to subscribe to the Telegram channel. Download the app for easy and direct reading on mobile.)