ஆட்டோ சப்ளயர் தொழிற்சாலையில் கொத்தடிமை முறை : அரசு மீட்டது எப்படி
By Vaishnavi
தகவல் : இந்தியா லேபர் லைனின் சென்னை குழு & வழக்கறிஞர் ஸ்ரீலா M
ஒடிசாவை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள மைக்ரோ பிட் தொழிற்சாலையில் கட்டாயப்படுத்தப்பட்ட வேலைச்சூழலில் பணி புரிந்த நிலையில் இந்தியா லேபர் லைன் குழுமம், வருவாய்த்துறை, DISH (The Directorate of Industrial Safety and Health) மற்றும் பல ஆர்வலர்கள் இணைந்து மே 4 ஆம் தேதி தொழிலாளர்களை மீட்டனர். தொழிலாளர்களை வன்முறைக்கு உள்ளாக்கி, அவர்களைக் கைப்பேசியைக் கையகப்படுத்தி அவர்களின் நகர்வுகளைக் கட்டுப்படுத்திய காண்ட்ராக்டர் ராஜின் காண்ட்ராக்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது . மேலும் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைப்பேசிகள் பறிக்கப்பட்டு மொழி & இடம் அறியாத நிலையில் தொழிலாளர்கள் மீட்கப்பட்டது எப்படி?
ஒடிசாவில் தரிங்கப்பாடி என்ற மாவட்டத்தில் இருக்கும் புலம் பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பந்து சர்மிக் சேவ கேந்திரா நெட்வொர்க்கை தொடர்பு கொண்டுள்ளனர்.
வேலைக்காகச் சென்ற தங்கள் குடும்பத்தைச் சார்ந்த 7 பேர் பற்றிய தகவல் தெரியவில்லை என்றும் அவர்களிடம் தொலைப்பேசி இருந்தும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். சென்னை இரயில் நிலையத்தில் இறுதியாக இறங்கியுள்ளதாகவும் அதற்குப் பின் எந்த தகவலும் இல்லை என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்த தகவல் கொச்சி லேபர் லைனுக்கு சென்று, பின் சென்னை லேபர் லைனை வந்தடைகிறது.
பின் சென்னை லேபர் லைன் குழுவினர் , குடும்பத்தினர் கொடுத்த தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ள முயலையில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அவர்களைத் தொடர்பு கொள்ள முடிந்துள்ளது. “ஒடிசாவில் இருந்து வந்த 7 தொழிலாளர்கள், 10-15 நாட்களாக மைக்ரோ பிட் எனும் தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும் கட்டாயப்படுத்தித் தங்கவைத்திருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தெரிந்த காண்ட்ராக்டர் இருப்பதாகச் சொல்லி அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டிற்கு தங்களை அழைத்து சென்றதாக தொழிலாளர்கள் கூறினார்கள் . பின்னர் அந்த 7 தொழிலாளர்களை ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்துள்ளார் காண்ட்ராக்டர் ராஜ்” எனக்கூறுகிறார் சென்னை லேபர் லைன் குழுவைச் சார்ந்த கலியபெருமாள்
அழைப்பு வந்து 5 நாட்களுக்கு பிறகே தொழிலாளர்களை நெருங்க முடிந்துள்ளது. பேசிய சிறு உரையாடல்களில் கிடைத்த தகவல் படி, முதலில் அம்பத்தூரில் உள்ள ஒரு தியேட்டர் பின்புறம் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. பின்னர் வந்த தகவலில் அவர்கள் அடிக்கப்படுவதாவும், மோசமான வார்த்தைகளில் திட்டப்படுவதாவும் கூறியுள்ளனர். தொடர்ந்து லேபர் லைன் குழுவினர் அழைக்க முயற்சி செய்த பின்னரும் அவர்கள் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையில், ஐந்தாவது நாள் அழைப்பு கொடுக்கப்பட்டபோது, ஒருவர் எடுத்து, “நான் அவங்கள பாத்துட்டேன். கவலைப்பட வேண்டாம். நானே காவல் துறையில் புகார் கொடுக்கப்போகிறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார்.
காண்ட்ராக்டர் சார்ந்த நபர்கள் திசை திருப்புவதற்காக உணர்ந்த லேபர் லைன் குழுவினர் நகர்வுகளை வேகப்படுத்துகின்றனர். கேரளா SFI மூலம் தகவல் தெரிந்து சென்னை SFI தோழர்கள் இடத்திற்குச் சென்ற பிறகும் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அறியமுடியவில்லை.
பிரச்சனை தீவிரமடைந்ததை உணர்ந்த இந்தியா லேபர் லைன் குழுவினர் உள்ளூர் VAO, Revenue துறை, DISH, தாசில்தார் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர் .
மறு நாள் VAO இயல்பாகத் தொழிற்சாலைக்குள் சென்று தொழிற்சாலையின் இடம், புலம் பெயர் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் கிடைக்கப்பட்ட தகவல் உண்மை என்று உறுதி செய்யப்படுகிறது.பின்பு சுமார் 10 மணி அளவு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து குழுவும், சென்னை லேபர் லைன் குழுவும் தொழிற்சாலைக்கு நேரில் செல்கிறது.
மிகவும் துணிச்சலாகத் தொழிற்சாலைக்குள் உள்ளே நுழைந்த தாசில்தார் தொழிற்சாலை நிர்வாகத்தை வரும்படி கூறியுள்ளார். கொத்தடிமையாக தொழிலாளர்கள் உள்ளதாகப் புகார் கிடைத்திருக்கு அதனால் ஒத்துழைக்கும்படி M.D யிடம் கூறப்பட்டுள்ளது . கொத்தடிமைத்தனம் என்றால் என்ன என்று புரியாத M.D , தொழிலாளர்களை நாங்கள் அப்படி நடத்துவதில்லை, 8 மணி நேரம் மட்டுமே வேலை, இடைவெளி நேரம் உள்ளது, நேரத்திற்கு வந்து நேரத்திற்குச் செல்வதாகக் கூறியுள்ளார். பின் தாசில்தார் தொழிலாளர்கள் அனைவரையும் கூடச் செய்துள்ளார். தொழிற்சாலை வளாகத்திற்கு உள்ளேயே ஒரு கட்டிடத்தில் 10-15 தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கூடிய தொழிலாளர்களிடம் கொத்தடிமை போல் நடத்தப்படுகிறீர்களா என்று நேரடியாகக் கேட்கப்பட்டது.
தொழிலாளர்கள் சந்தித்ததும், கோரிக்கைகளும்
இளம் தொழிலாளர்கள் முன்வந்து தாங்கள் தான் அழைத்ததாகக் கூறி தாங்கள் அடிக்கப்படுவதாகவும் , திட்டப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி வேலை புரியச் செய்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.
வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் வேலை பளு அதிகமாக இருப்பதால் வேலையைத் தொடர விருப்பமில்லை என்று கூறியுள்ளார்கள். அதை ஏற்க மறுத்த காண்ட்ராக்டர் செல்போனை பறிமுதல் செய்து, கையில் எந்த பணமும் கொடுக்காமல், உணவை மட்டும் வழங்கி வேலை செய்ய வைத்துள்ளார். இதில் 19 வயதிருக்கும் இரு தொழிலாளர்கள் கேள்வி எழுப்பினாலோ,செல்போனை கேட்டாலோ காண்ட்ராக்டர் அடித்து வேலை வாங்கியுள்ளார்.
மாத ஊதியம் கொடுக்கும் தளம் என்பதால் கையில் எந்த பணம் இல்லாத சூழ்நிலையில், கைப்பேசி பறிக்கப்பட்டு, வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காண்ட்ராக்டரிடம் வன்முறையைச் சந்தித்த தொழிலாளர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர்.
விசாரணைக்கு பின்பு, தங்கள் விருப்பத்தை கேட்டபொழுது, 7 ஒடிசா தொழிலாளர்களில் இளம் வயதில் இருக்கும் 4 தொழிலாளர்கள் தாங்கள் ஊருக்குத் திரும்ப விரும்புவதாகவும், தங்கள் 30களில் இருக்கும் மீதம் மூன்று தொழிலாளர்கள் தாங்கள் வேலையே இங்கேயே தொடர விரும்புவதாக குறிப்பிட்டனர். பின்பு அவர்கள் வேலை நாட்களின் படி ஊதியம் கணக்கெடுக்கப்பட்டு, அப்பணம் ரொக்கமாக வழங்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி தாங்கள் வேலை செய்த 15 நாட்களுக்கு ஊதியத்தைப் பெற்று அதை நாள் இரவு ரயிலில் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.
யார் பொறுப்பு? எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?
காண்ட்ராக்ட் சூப்பர்வைசர் ராஜ் தொழிற்சாலைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். கம்பனி கொடுக்கும் 600 சம்பளத்தில், 80 ரூபாய் பிடித்தம் போக 520 ஊதியமாக வழங்கப்படுவதாக காண்ட்ராக்டர் கூறியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் வேலைக்கு அமர்த்திய தொழிலாளர்களின் பட்டியல் கொடுக்கப்பட வேண்டும் என்று கான்ட்ராக்டரிடம் கூறப்பட்டுள்ளது. பின்பு RI & VAO மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் அறிக்கையை சமர்ப்பத்தினர்.காண்ட்ராக்டர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தாசில்தார் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. தாசில்தார் தொழிற்சாலையில் நடத்தில் விசாரணைக்கு பின், அதே இடத்தில் ராஜின் கான்ட்ராக்ட்டை தொழிற்சாலை நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
சுமார் 50 தொழிலாளர்களைக் கொண்ட மைக்ரோ சிட் தொழிற்சாலை நட்டு போல்ட்டு போன்ற உதிரிப் பாகங்களைத் தயாரிக்கிறது. பாதிக்கு மேல் புலம் பெயர் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. காண்ட்ராக்ட் லேபர் ஒழிப்பு சட்டத்தின் கீழ் 20 தொழிலாளர்களுக்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட கான்ட்ராக்டருக்கு மட்டுமே லைசன்ஸ் பொருந்தும். ஆனால் 10-12 தொழிலாளர்களை மட்டுமே கொண்டுள்ள ராஜ் கான்ட்ராக்டருக்கு லைசன்ஸ் பொருந்தாத சூழ்நிலையே நிலவுகிறது.
குறிப்பிட்ட நேரத்தில் வேலையைச் செய்து, என்னுடைய இலக்கை அடைந்தாள் போதும் என்ற போக்குடன் நிர்வாகத்திற்கும் கான்ட்ராக்டரிற்கும் இடையே அலைக்கழிக்கப்படும் பல காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் மத்தியில் இப்புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை மிக மோசமானது . “சிறு தொழிற்சாலையில் இருந்து பெரிய தொழிற்சாலையில் வரை முதன்மை முதலாளி காண்ட்ராக்ட் சூப்பர்வைசரின் பின்னணியைப் பற்றிய மதிப்பிடுவதில்லை. உற்பத்தியை தாண்டி கான்ட்ராக்டரின் ஆட்செர்ப்பு முறையைப் பற்றியும் தொழிலாளர்களின் மனித உரிமை மீறல் பற்றிய எந்த வித அக்கறையும் கொள்வதில்லை நிர்வாகம்”. இந்நிலையில் கான்ட்ராக்டரை நீக்கியதோடு இந்த மொத்த பிரச்சனைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற காட்சியை நிர்வாகம் சித்தரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட்ட DEPUTY டைரக்டர் தொடர்பு கொண்டு நடந்தவையை எடுத்துரைத்து, தங்கள் தரப்பில் இருந்து ஆய்வு மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பியதைத் தாண்டி, தொழிற்சாலை நிலைக்குறித்த ஆய்வு நடத்தப்பட்ட்டதா என்பது கேள்வியாகவே உள்ளது. தொழிலாளாளர்களின் தகவல் எடுக்கப்பட்டதா, அவர்களின் ஊர்களில் உள்ள வருவாய்துறைக்கு தகவல் சொல்லப்பட்டதா என்பதும் சந்தேகமே” எனக் கூறுகிறார் தொழிலாளர் வழக்கறிஞர் ஸ்ரீலா
புலம் பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கட்டமைப்புகள் என்ன ?
இன்டர்ஸ்டேட் மைக்ராண்ட் ஒர்க்கேர்ஸ் சட்டத்தின் நோக்கம், புலம் பெயர்த்தொழிலாளர்கள் பதிவற்று இருப்பதை தவிர்த்தல், அவர்களின் புலம்பெயருதலை மானியப்படுத்துடல், புலம் பெயர் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தும் முதலாளிகள் மற்றும் கான்ட்ராக்டரை பொறுப்பாக்குதல். தொழிற்சாலை சட்டம் கூறியவாறு அடிப்படையான, சுகாதாரமான தங்குமிடங்களை உறுதி செய்தல் உள்ளிட்டவை அடங்கும்.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டியவை :
- புலம் பெயர் தொழிலாளர்கள் எந்த ஊரை சார்ந்தவர்கள், எந்த ஊரிற்கு புலம் பெயருகிறார்கள் என்று பதிவு செய்வது முதன்மை. மேலும் அவர்களுடைய போக்குவரத்து அந்தந்த நிர்வாகம்/ கான்ட்ராக்டரின் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.
- அவர்களின் வேலையே பொறுத்து, அடையாள அட்டையுடன் அந்தந்த மாநில தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யலாம்
“அம்பத்தூர் மைக்ரோ சிட் நிறுவனத்தில் புலம் பெயர்த்தொழிலாளர்களின் பதிவு மற்றும் அதன் நகல் தொழிலாளர் துறைக்கு கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மேலும் காண்ட்ராக்ட் சூப்பர்வைசர் வேலை நேரத்தில் தொழிற்சாலை வளாகத்திற்குள் இருந்திருக்க வேண்டும். வேலை இடத்தில் நடக்க கூடிய பிரச்சனைகளை அங்கு உள்ள மனித வள மேலாளர் காண்ட்ராக்ட் சூப்பர்வைசரின் உதவியுடன் கையாள வேண்டும் ” எனக்கூறுகிறார் ஸ்ரீலா
பாதிக்கப்பட்ட ஒடிசா புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குப் பத்திரமாக அனுப்பப்பட்டது பலரின் கூட்டு முயற்சியின் விளைவே . எனினும் இதைப் போன்ற அத்துமீறல்கள் தொடராது என்பதற்கான உறுதிப்பாடு அரசு இயந்திரங்கள் செயல்படுவதிலும், சட்டம் அமலாக்கப்படுவதிலும் உள்ளது. மிக முக்கியமாக இதைப் போன்ற சம்பவத்தை இந்தியா லேபர் லைன்/ தாசில்தார்/இடதுசாரி தொழிற்சங்கங்கள் அல்ல அமைப்பிடம் கொண்டு சேர்ப்பது உழைக்கும் வர்க்க தோழர்களாகிய அனைத்து தொழிலாளர்களின் கடமை. இவையே கொத்தடிமைத்தனத்தில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களை மீட்க வழிவகுக்கும்.
- பெருந்தொற்றில் நம்மை காத்த செவிலியர்களைக் கைவிட்ட தி.மு.க ஆட்சி
- 41 வயதே ஆன தமிழ்நாட்டைச் சேர்ந்த மும்பை துப்புரவுப் பணியாளர் மாரடைப்பில் இறப்பு
- கடந்த வார செய்திகள்: மார்ச் 10
- கடந்த வாரத் தொழிலாளர் செய்திகள்
Subscribe to support Workers Unity – Click Here
(Workers can follow Unity’s Facebook, Twitter and YouTube. Click here to subscribe to the Telegram channel. Download the app for easy and direct reading on mobile.)